ஆபரேஷன் கந்துவட்டி! டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை! 774136174


ஆபரேஷன் கந்துவட்டி! டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை!


கந்துவட்டி கொடுமைத் தொடர்பாக, வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், 'ஆபரேஷன் கந்துவட்டி' நடவடிக்கை மூலம் கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் நிலுவையில் உள்ள வழக்குகளையும் உடனடியாக விசாரித்து, தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, “கந்துவட்டி கொடுமை தொடர்பான புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டி தொடர்பான வழக்குகளை கையாள 'ஆபரேஷன் கந்துவட்டி' என்ற சிறப்பு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. கந்துவட்டி தொடர்பாக காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டிகாரர்களின் இருப்பிடங்களை உடனடியாக சோதித்து, கையெழுத்துப் பெற்ற காகிதங்கள், சட்ட விரோதமான ஆவணங்கள், தொகை குறிப்பிடப்படாத காசோலைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கந்துவட்டி கொடுமையை தடுக்க அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் “அதிக வட்டி வசூல் தடை சட்டம் 2003”இன் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கந்துவட்டி கொடுமையால் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால், பலர் தூக்கிட்டும், குடும்பத்தோடு தற்கொலை செய்தும் உயிரிழந்து வருகின்றனர். இருப்பினும் இது போன்ற வழக்குகள் குறைவதற்கு தமிழக அரசால் தீவிர நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.

கந்துவட்டி கொடுமை காரணமாக கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே போலீஸ்காரர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது சம்பந்தமாக பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், 'ஆபரேஷன் கந்துவட்டி' என்ற சிறப்பு அமைப்பை தொடங்கி அதன் மூலம் கடுமையாக நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

Comments

Popular posts from this blog